Saturday, April 23, 2011

சித்திரை திருவிழா..

இப்ப எல்லா நம்ப கனகுக்கு புடிச்ச பாட்டு "ஒத்த சொல்லால என் நெஞ்ச..." பூளைமேடு பள்ளிக்கூடத்துக்கு போற 74 பஸ்ல வர பிரியா இதுக்கு காரணம். போன ஆறு மாசமா முயற்சி பண்ணி ஜெயிச்சிப்புட்டான் நம்ப hero.. வெள்ளனூர்ல இருந்து பூளைமேடு வரைக்கும் போற வரைக்கும் நம்ப பய பண்ணாத அலும்பு அட்டூழியம் இல்ல, தொங்கல்ல வாறது, ஒவ்வொரு stopலயும் எறங்கி, ஓடற பஸ்ல ஏற்றது இப்டி எல்லா செஞ்சு புள்ளைய கவுத்துபுட்டான். பசங்கா தா பொல்லாப்புனா புள்ளைங்க அதுக்கும் மேல. ஆறு மாசமா சாட காட்டி வந்தவ கடைசி பரீட்சை அன்னிக்கு சொல்லிச்சு "உன எனக்கு புடிச்சுஇருக்கு"
றெக்க மொளைக்காத கொற நம்ம தொரைக்கு, பள்ளிக்கூடம் இல்லாட்டியும் காலைல 9 மணிக்கு கெளம்பியாச்சு. ஹீரோ சைக்கிள்ல கெளம்பின நம்ம ஹீரோ ஊற வலம் வருவாரு. அன்னிக்கும் இன்னிக்குமா ரெண்டு ஒருதடவ பாத்தாலும் பார்வைல மட்டும் பேசிகிட்டாக இந்த ஜோடி. மோர்க்காரி, பால்காரர் வார நேரம் பாத்து பய மூனாந்த்தெருவுல நிப்பாப்டி. தரிசனம் கெடைக்கற அன்னிக்கு பயலுக்கு கொண்டாட்டம். செத்த நாள்ல வந்துச்சு மாரியம்மன் சித்திரை திருவிழா. ஊருக்குள்ள சிறுசும் பெருசும் கொண்டாட்டமாச்சு. பெருசுங்க தண்ணில மெதக்க சிறுசுங்க அதுங்க ஆளுங்கள தொரத்த இப்படி களகட்டுச்சு திருவிழா.
பண்டிக நாலாநாள் மஞ்சத்தண்ணி, ஊர்ப்பசங்க மேல புள்ளைங்க த்தண்ணி ஊத்தி சேதி சொல்ற நாள். கொஞ்சம் வெட்கம் விட்டு கதையோட அம்மணி நம்ப ஹீரோவா தொரத்த, ஓடிபோய் மறஞ்சுக்க பாத்தான் ஆத்தா பின்னாடி. இத்தனையும் பாத்தா ஆத்தா செல்லமா கோவபட்டுச்சு. "சித்தப்ப மக பெரியப்ப மவ அண்ண மேல தண்ணி ஊத்தக்கூடாது, உம்மாம மவ மேல போயி ஊத்து புள்ள" வெளயாட்ட சொன்ன பேச்சுல இருந்த உண்ம சாட்ட அடியா விழுந்துச்சு. பேசிக்கிட்டு இருக்கும் பொது ஒரு வாளி மஞ்சத்தண்ணி விழுந்தது கனகு மேல. ஊத்தினது அவன் மாமன்மக!!!

Thursday, January 27, 2011

சனிப்பொணம்..

பெரியவர் அவர், வயது அறுபத்திரண்டு.1960'களில் ஊர் விட்டு ஊர் வந்து கலப்பு திருமணம் செய்து கொண்ட சிலதுகளில் அவரும் ஒருவர். தனக்கு துணையாய் வந்த உறவு மட்டும் போதுமென்று அந்த நகரத்திலயே தங்கிவிட்டார். வேலை, மகன், சொந்த வீடு இப்படி மகிழ்ச்சியின் ஊற்றுகள் திறக்க, அமைதியாய் உருண்டது காலம். பின்னிரவில் நடந்த விபத்தொன்றில் மகனை தொலைத்துவிட்டு திரும்பவும் இரு மரமாய் நின்றனர் அவர்களிருவரும். மெதுவாய் உருள்வதை நிறுத்திக்கொள்ளவில்லை காலம். வேலை, மனைவி, இவை எல்லாம் பறிகொடுத்து போக மீதமிருந்தது அவரும், வீடும். வெள்ளிமுட்டையிடும் வாத்தாய் இருந்தது வீடு. முன்பக்கத்தை வாடகைக்கு விட்ட வகையில் வரும் வரும்படியோண்ட்ரே நிதிஆதரமாய் இருந்தது.

ஒரு மாரிக்காலத்தின் தொடக்கத்தில் குடியிருந்த தம்பதியரில், கணவன் இல்லாத சனிக்கிழமை பொழுதொன்றில் பெண்மணி நடு வீட்டில் தொங்கினாள். வீட்டின் முதலாளி என்ற முறையில் சாட்சியம் கூற, விசாரணை செய்ய அழைத்து சென்றனர் பெரியவரை. காக்கிசட்டைகளின் வாசனை, பூட்ஸ்களின் சத்தம், கேளா வசைமொழிகள், வித்தியாசமான ஓலங்கள்.. இவை எல்லாம் வாடிக்கை ஆயின சில நாட்களுக்கு. விசாரணை என்ற பெயரில் வீட்டிலும் காக்கி சட்டை வாசனை, பூட்ஸ்களின் சத்தம். வீட்டில் விசாரணைகளை நிறுத்த கொடுத்த லஞ்சம், வரும்படியில்லா செலவுகள் இப்படி
மெதுவாய் கரைய ஆரம்பித்தது கையிருப்பு.

மெதுவாய் ஒரு பூதம் ஒன்று உறங்கிக்கொண்டிருந்தது வீட்டினுள்ளே. அது யாரையும் குடி வர விடவில்லை. அந்த பூதம் பேசும் பல குரல்களில், ஆனால் உருவம் கிடையாது. ஒற்றை வரும்படி ஆதாரமும் நின்று போக, அவரின் அன்றாட தேவைகளின் ஓலங்கள் காதில் விழவேயில்லை அந்த பூதத்திற்கு. கடனாய் கொடுக்கவும் யோசனை பலருக்கு. பிற்பகல் ஒன்றில் விட்டதை பார்த்துகொண்டு இருந்தார், மெதுவாய் எழுந்து தள்ளாடி நடக்க ஆரம்பித்தார் கடை ஒன்றிற்கு. வீட்டின் வெளியே பூதம் சொல்லிக்கொண்டு இருந்தது, "அந்த வீட்டுல அந்த பொண்ணோட ஆவி இருக்கும்பா".


"என்ன வேணும் பெரியவரே? ஆறடிக்கு கயிறு குடுப்பா."

Wednesday, December 29, 2010

நினைவுகள்..

வானம் பார்க்கிறேன்
ஒரு இரவில்,
என்விரல் பிடித்து
நட்சத்திரங்கள் இணைத்து
நீ வரைந்த நாம்...

திருமண பத்திரிக்கை...

அவன் கவிதை தொகுப்பின் சில பக்கங்கள்
கிழிக்கப்படுகின்றன
சில திருமண பத்திரிக்கைகளின் வருகைக்கு பின்..

Thursday, December 9, 2010

முதல் முத்தம்..

என் உள்ளங்கையில் என்னிதழ் வரைந்து
உன்கன்னங்களில் ஒட்டிகொண்டாய்..

Tuesday, November 2, 2010

நடிக்க மறந்தது....

உறங்குவது போல் நடிக்கும் பொழுதுகளில் மட்டும்
மெலிதாய் உதிரும் என்கவிதைகள் உன்மொழியில்,
என் முகம் கூர்ந்து, நீ கேட்கும் கேள்விகள்,
நடிக்க மறந்தது உன் நாணம் மட்டும்!!!

Monday, October 18, 2010

கூவிக்கூவி..

கிராமங்களில் வாங்கிய கனவை நகரங்களில் தொலைத்த இந்திய ஜனத்தொகையின் பெருன்பான்மையில் அவனும் ஒருவன். அவன் பெயர் குமார். வானம் பார்த்த பூமியில் வாங்கிய கடனை அடைக்க, வந்தான் புது டில்லிக்கு 14-ஆம் வயதில். தொழில் அமைந்தது, சாந்தினி சௌக் போன்ற வியாபார தெருக்களில் hand-bag, money purse, belt விற்பது. இன்றைக்கு வயது 34. தொழில் அதே, ஆனால் குடும்பம், குழந்தைகள் உண்டு. பன்னிரண்டு ருபாய் hand bag ஆறு ருபாய் purse ஒன்பது ருபாய் belt இப்படி வாங்கி உருப்படிக்கு ஒன்றாய், இரண்டு மடங்கு, மூன்று மடங்கு வைத்து விற்க வேண்டும். "இப்படி அதிகமா விக்கறது அநியாயம் இல்லைங்க, அப்ப தா போலீஸ் மாமூல், மீட்டர் வட்டி, கூரை ஒழுகும் வீட்டு வாடகை, traffic சிக்னல்ல நிக்கற கார்ல இருந்து பொருள் வாங்கி ஏமாத்தி ஓடற ஆளுங்க, இப்படி எல்லாரையும் தாண்டி நாலு காசு பாக்க முடியும், வயித்த கழுவ முடியும்" இது அவன் வழக்கு, மறுக்க மனம் வருவதில்லை.

வெளிநாட்டு பயணிகளை பார்த்தால் கொண்டாட்டம் தான், சுலபமாய் ஏமாற்றி காசு பார்க்க முடியும். "சைக்கிள்ள போறவன் வண்டில போகணும்னு ஆச படறான், வண்டில போறவன் கார்ல போக ஆச படறான், தெனமும் காஞ்சி குடிகார நா ஒரு நாள் சுடு சோறு திங்க ஆச படறது தப்பா?, ஒலகத்துல எப்படி எல்லாமோ எமாத்தராங்கலாமா, அவங்கள மொதல்ல சுடுங்க அப்புறம் என்கிட்டே வாங்க" அவனுக்கு அவனே சொல்லிகொள்ளும் ஆறுதல். ஊர் முழுவதும் சிறிதும் பெருதுமாய் போஸ்டர்கள் பார்த்து, சிறிது உற்சாகமாய் இருந்தான் குமார். நிறைய வெளிநாட்டு பயணிகள் வருவர், கொஞ்சம் நெறைய பணம் பார்க்கலாம் என்று மனக்கணக்கு போட்டு இருந்தான்.
இவனது இயற்கை எதிரி மழை, ஊரே வணங்கி வரவேர்த்தாலும், இவன் பொழப்பு கெடுத்து போகும் மழை. இந்த முறை நாள் முழுவதும் பெய்தது, கூரை ஒழுகும் வீட்டை சுற்றிலும் நீர். வேலை செல்ல முடியவில்லை, வீட்டுக்காரி பாத்திரம் கழுவிய கொஞ்சமும் போனது மீட்டர் வட்டிக்கு, கையில் சொற்பதிலும் சொற்பம். வேலைக்கு கிளம்பினான், சாந்தினி சௌக்கில் கால் வைத்த நேரம், வந்த போலீஸ்காரர், இருந்த சொற்பத்தையும் உருவிக்கொண்டு, துரத்தி விட்டார்.. "ஊர்ல வெளையாட்டு போட்டிங்க நடக்குது, பத்து நாளைக்கு ஏதும் விக்க கூடாது, மீறி வித்த, ஆறு மாசம் உள்ள போக வேண்டி வரும்" மெதுவாய் முனகிக்கொண்டே வந்தான், வீட்டில் முனகலோடு படுத்து இருந்தாள் செல்ல மகள்.
மூன்று நாள் முன்னால் பெய்த மழையோடு பரிசாய் வந்தது ஜன்னி.
வீட்டுக்காரியின் தினகூலியில் இன்னும் பத்து நாள் ஓட்ட வேண்டும், மருகும் மகளுக்கு வைத்தியம் பார்க்க வேண்டும். மிச்சம் இருக்கும் சிறுசுகளை காய வைத்து விட்டு, மருந்து மாத்திரைகள் வாங்கி வந்தான் அரையும் குறையுமாய். நாட்களை எண்ணிக்கொண்டே காத்து இருந்தான் வேலை செல்ல, நோய்க்கு காத்து இருக்க தெரியவில்லை, ஒரே மகளின் கேட்கும் திறனை பறித்துகொண்டது. அவளுக்கு மட்டுமல்ல, வீட்டில் எல்லாரிடமும் அமைதி நிலவியது . ஊருக்கும் நாட்டுக்கும் விளையாட்டு, சில சமயம் எல்லாரையும் ஆட்டி விடும். நாட்கள் கடந்து, கூவி கூவி மீண்டும் விற்க ஆரம்பித்தான், மிச்சமிருக்கும் வாழ்கையை..

Sunday, September 26, 2010

அழகு :)

களங்கமில்லா நிலவு
சிணுங்காத நீ
அழகில்லை..

Wednesday, September 15, 2010

முடிவிலி..

என்தோளில் முகம் புதைத்து, நாம்
படிக்க முற்பட்ட காதல் கதைகளுக்கு
ஒரே முடிவு என்றும்.. ;)

Monday, September 13, 2010

:)

கனவை தொடர்ந்து உறக்கம் கலைந்து விழிக்கிறேன்..

கனவின் தொடர்ச்சியாய் உறக்கத்தில் அவள் ..